திருகோணமலை – மூதூர் பகுதியில் பஸ் ஒன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மதியம் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உட்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும், கம்பஹா – வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பஸ் ஒன்றுமே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்த 20 பேரில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
விபத்தில் காயமடைந்தோர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
