நாளை அல்லது நாளை மறுதினம் தேர்தல் ஆணைக்குழுவின் ஒன்று கூடலின் பின்னர் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பிலான இறுதி தீர்மானம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. குறித்த பிரசசினை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது.
அபே ஜனபல கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்ட வேதிநிகம விமல திஸ்ஸ தேரர் மற்றும் அக்கட்சியை சேர்ந்த அதுரெலிய ரத்தன தேரர் ஆகியோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினருக்கான பெயர் குறிப்பிடப்பட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு மத்தியில் வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கட்சியின் பெயரை உள்ளடக்காமல் இருப்பதற்கு தேர்தல்க்ள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் நாம்தொடர்பு கொண்டு கேட்டபோது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாமென அவர் தெரிவிதார். அபேஜனபல கட்சியின் செயலாளராக செயல்பட்ட வேதிநிகம விமல திஸ்ஸ தனக்கு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென கடிதம் ஒன்றின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தார்.
எனினும் கட்சியின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து மற்றுமொரு நபரை செயலாளராக நியமித்துள்ளனர். நியமிக்கப்பட வேண்டிய புதிய தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து புதிய செயலாளரின் கையொப்பத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்க கொள்ள நடவடிக்கை எடுத்தது. அபேஜனபல கட்சியின் சார்பில் தேர்தலில்போட்டியிட்ட இருவர் அதுரெலிய ரத்ன தேரர், வேதிநிகம விமல திஸ்ஸ தேரருக்கு எதிராக யக்கல மற்றும் வீரகுல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
அவர்களில் ஒருமுறைப்பாட்டாளர் வேதிநிகம விமல திஸ்ஸ தேரர் நம்பிக்கை துரோகம் செய்து மறைந்துள்ளதாகவும் அவரை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். மற்றைய முறைப்பாட்டாளர் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பிலான பிரச்சினை குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே குறித்த கட்சியின் அநுராதபுரம் கிழக்கு தொகுதி அமைப்பாளரான ஷாமினி வீரசூரியவும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளாரர்.
இதேவேளை பொது தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் உறுப்பினர்களை வழங்கப்பட்டிருந்த கால எல்லை கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற கன்னி அமர்வு இடம்பெறவுள்ளது. அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயரிடப்படாவிட்டாலும் குறித்த உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
“வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாவிட்டால் 20 ஆம் திகதி அவர்களுக்கு பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யமுடியாது போகலாம். இதன் மூலம் அவர்களுடைய உறுப்புரிமை இரத்தாகுமென்பது இதன் கருத்தல்ல.”
