வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்காக இணைக்கும் செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளமான www.pubad.gov.lk என்ற இணையதளத்தில் அதனை பார்வையிட முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் பதவியேற்று ஒரு சில வாரங்களில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை திட்டமிட்டார். தேர்தல் அறிவிக்கப்பட்டமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய குறித்த வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் செயல்பாடுகள் அனைத்தும் நிறைவுக்கு வந்ததயைடுத்து அதனை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் இன்றைய தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான கடிதங்களை ஆரம்பித்து வைக்கும் செயல்பாடும் இன்றைய தினமே ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நியமனம் கிடைக்கும் பட்டதாரிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி தமக்குரிய பிரதேச செயலக அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும். தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காணப்பட்டால் அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ள முடியும். எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
