விவசாயத்துறைக்கு சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது திரவ உரத்தொகை இன்று நாட்டுக்கு எடுத்துவரப்படவுள்ளது. சேதனப்பசளை விவசாயத்துறைக்கான வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கி சேதனப்பசளை மற்றும் திரவ உர உற்பத்தி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை பெரும்போகத்திற்கென தயாரிக்கப்படும் சேதனப்பசளைக்கு மேலதிகமாக திரவ உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 9 இலட்சம் ஹெக்டெயர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் குறித்த திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதியே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவிடமிருந்து 3.1 மில்லியன் லீற்றர் நெனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதற்கு கோரப்பட்டு அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்றைய தினம் விமானத்தினூடாக ஒரு இலட்சம் லீற்றர் நெனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.