ஈஷி கேஷ் முறையில் இரத்தினபுரி நகரில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை ஊழியர் ஒருவர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து ஒருசில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை ஊழியர் ஒருவரிடம் இருந்து நான்கு கிராமும் 550 மில்லி கிராம் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன் இரண்டு செல்லிட தொலைபேசிகளும் சிறைச்சாலை உத்தியோகபூர்வ அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டதாக இரத்தினபுரி பிராந்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவர் நீண்டகாலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்கவின் ஆலோசனைக்கு அமையவே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை 21 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிருவாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க நேற்று தெரிவித்திருந்தார். கடந்த 2 மாதங்களுக்குள் பல்வேறு ஊழல் மோசடி செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்ட 15 சிறைச்சாலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரும் இரண்டு பிரதான ஜெய்லர்களும் அடங்குவதாக அறிவிக்கப்படுகின்றது.
