கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20ம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு சட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்படும் மற்றும் தளர்த்தப்படும் என்பது தொடர்பான விடயங்களை ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று அறிவித்தது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20ம் திகதி திங்கட் கிழமை காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்பட்டு அதேதினம் இரவு எட்டு மணிக்கு மீள அமுல்படுத்தப்படும். அதன் பின்னர் மீள் அறிவித்தல் வரும் வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டமானது ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிமுதல் அடுத்தநாள் காலை ஐந்து மணிவரை அமுலில் இருக்கும்.
கண்டி, கேகாலை மற்றும் அம்பாரை மாவட்டங்களின் அலவத்துகொட, அக்குரணை, வரக்காபொல மற்றும் அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாமல் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும். குறித்த 3 மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டமானது ஏப்ரல் 20ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், பம்பலபிடிய, கெசல்வத்த, மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, மற்றும் கொஹூவல ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டமானது ஏப்ரல் மாதம் 22ம் திகதி புதன்கிழமை முதல் காலை ஐந்து மணிக்கு நீக்கப்பட்டு இரவு எட்டு மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல, கொச்சிக்கடை, மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். அம்மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டமானது ஏப்ரல் மாதம் 22ம் திகதி புதன்கிழமை முதல் காலை ஐந்து மணிக்கு நீக்கப்பட்டு இரவு எட்டு மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், மாரவில, மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டமானது ஏப்ரல் மாதம் 22ம் திகதி புதன்கிழமை முதல் காலை ஐந்து மணிக்கு நீக்கப்பட்டு இரவு எட்டு மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது. அம்மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டமானது ஏப்ரல் மாதம் 22ம் திகதி புதன்கிழமை முதல் காலை ஐந்து மணிக்கு நீக்கப்பட்டு இரவு எட்டு மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
அதற்கமைய கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், பம்பலபிடிய, கெசல்வத்த, மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, கொஹூவல, ஜா-எல, கொச்சிக்கடை, சீதுவ, புத்தளம், மாரவில, வென்னப்புவ, பண்டாரகம, பயாகல, பேருவளை, அலுத்கம, வரக்காபொல, அக்குரணை, அலவத்துகொட மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டமானது தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அபாயவலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு பகுதிக்கும் உட்செல்லவோ அங்கிருந்து வெளியேறவோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய சேவைக்காக பிரதான வீதியை பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொழிலுக்கு செல்லுதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே பிரதான வீதியை பயன்படுத்த முடியும்.
இதேவேளை பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மேலதிக வகுப்புக்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா திரையரங்குகள் என்பன மீள் அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருக்கும். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், கூட்டுதாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமைப்போல் இயங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
