பொதுத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலை பிற்போடுவதற்கான எவ்வித யோசனையும் இல்லையென அவர் குறிப்பிட்டார். செய்தி ஆசிரியர்கள், விசேட தொகுப்பு ஆசிரியர்கள், அரசியல் கட்டுரை எழுத்தாளர்கள் மற்றும் கேலிச்சித்திர கலைஞர்களை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைதுசெய்வது தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர், அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சட்டரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். 19 வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
19 வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. தமது அரசாங்கத்தின்போது யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டதோடு, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. எனினும் கடந்த 5 வருடங்களில் பொருளாதார வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
