இன்று வரை மக்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை நிராகரித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி தலைமைத்துவம் தனியான பயணமொன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடலாமென அவர் குறிப்பிட்டார். களனி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் நெருக்கடி பல வருடங்களாக காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் அது தொடர்பில் புரிந்துள்ளதாகவும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு மக்களிடம் கலந்துரையாட தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சகல மக்களுடனும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பாதை தொடர்பில் கலந்துரையாட தயாரென அவர் தெரிவித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமான அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் பொருளாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார். 2015 ம் ஆண்டின் பின்னர் எதிர்க்கட்சி குழுவினர் நாட்டை ஆட்சி செய்த விதம் தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டார். அவ்வாறான தரப்பினருக்கு ஆட்சிசெய்வதற்கென நாட்டை வழங்கியமை குறித்து மக்கள் புரிந்துகொண்டுள்ளதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டார். நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
