நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவவுள்ள வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி மழைவீழ்ச்சி, காற்றின் வேகம் மற்றும் கடலின் தன்மை குறித்து மீனவ மற்றும் கடற்படைச் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் சராசரி வேகமானது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கல்பட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும்.
காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளதால், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு வானிலை அவதானநிலையம் அறிவுறுத்தியுள்ளது.
