காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்த பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்துகின்றனர்.
பிள்ளைக்கு உரிய சிகிச்சையை வழங்குவதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தீவிரமான நிலையில் உள்ளதாகவும், இந்நிலைமை இதைவிட அதிகரித்தால் வைத்தியசாலையின் கொள்ளளவு தொடர்பில் பிரச்சினைகள் எழக்கூடும் என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகிறார்.
எனவே, தமது பிள்ளைகளுக்குக் காய்ச்சல் காணப்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், வீடுகளில் இருந்தவாறு கைவைத்தியம் செய்வதால் பிள்ளைக்குச் சிகிச்சை அளிப்பதற்கான நேரம் கைநழுவிப் போவதோடு, சுய சிகிச்சைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் வைத்தியர் மேலும் வலியுறுத்துகின்றார்.
