அமெரிக்கா – ஈரான் போரால் மேற்காசிய பிராந்தியம் மற்றும் உலகளவிலும் பேரழிவு தரும் விளைவுகள் காணப்படுவதாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
போர்களை நிறுத்துவது தொடர்பாக நியூயார்க்கில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் அவர் பேசியதாவது; மோதல்கள் அடிக்கடி நிகழும். சர்வதேச சட்டத்திற்கு முறையான மதிப்பு கொடுக்காவிட்டால், அவை நீண்டகாலப் பிரச்சினைகளாக மாறி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதும், அதை கடைபிடிப்பதும் கடினமாகி வருகிறது.
மேற்காசியாவில் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் கவலை அளிக்கின்றன. பேச்சுவார்த்தை தீர்வுகளை விட ராணுவ தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, பொதுமக்கள் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது.
மேற்காசிய பிராந்தியத்திலும், உலகளவிலும் பேரழிவு தரும் விளைவுகள் காணப்படுகிறது. நிலைமை கைமீறிச் செல்கிறது. யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவின் விளிம்பில் தற்போதைய சூழல் இருக்கிறது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மோதலுக்கு ராணுவ ரீதியிலான தீர்வு எதுவுமில்லை. பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலின் பாப் அல்-மண்டப் பகுதிகளைச் சுற்றியுள்ள சர்வதேச வழித்தடப் போக்குவரத்து உரிமைகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும். நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ராஜதந்திர பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி, என ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
