இவ்வருட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டங்களை உரிய கால எல்லைக்குள் நிறைவுசெய்தல் வேண்டும்.
ஆசிரியர் நியமனங்களின் ஊடாகத் தோட்டப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. குறைந்த பரீட்சைப் பெறுபேறுகளைக் காட்டும் பாடசாலைகளைக் கண்டறிந்து, அப்பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அனைவருக்கும் சமத்துவம் கிடைக்கப்பெறுகின்ற கல்வி முறைமையொன்றை உருவாக்குவதற்கே அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. நாம் தற்பொழுது எடுக்கும் தீர்மானங்கள் குறுகிய கால எதிர்காலத்திற்காக அன்றி, நீண்டகால எதிர்காலத்திற்காகவேயாகும்.
இலங்கையின் தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வமைச்சுகளின் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நேற்றையதினம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
