கடந்த சில நாட்களுக்கு முன்னர் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளான சாகரிகா புகையிரதம் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த போக்குவரத்து அதிகாரி அஸங்க சமரசிங்க, குறித்த புகையிரதம் இன்று (27) முதல் வழமை போன்று மீண்டும் தனது பயணங்களை ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த 24 ஆம் திகதி பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா புகையிரதம், வாத்துவ புகையிரத நிலையத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதன்போது புகையிரதத்தின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகின.
அதேவேளை, விபத்துக்குள்ளான சாகரிகா புகையிரதத்தில் பணியாற்றிய நான்கு பணியாளர்கள் புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை புகையிரத சேவைகளில் ஈடுபடுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, பிரதான பாதுகாவலர் , உதவிச் சாரதி மற்றும் உதவிப் பாதுகாவலர் ஆகியோரே இவ்வாறு புகையிரத போக்குவரத்து பணிகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
