இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையில் ஆரம்பித்துள்ள போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.
ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான குணு-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை பெற்றுள்ளவர்கள் மீண்டும் அந்த டிக்கெட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையால், இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
