இன்று பிற்பகல் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு அருகாமையிலோ நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கடிதத்தை போராட்டத்தில் ஈடுபடவுள்ள தரப்பினருக்கு வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட கடிதத்தில் உள்ளதாவது
‘ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரிந்து வீடுகளுக்குச் செல்வோருக்கும், கோட்டை மற்றும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படும்.
ஆர்ப்பாட்டத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல மற்றும் கண்டி உள்ளிட்ட பொருளாதார வலயங்களிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்பதால் , அது பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். அத்தோடு போக்குவரத்து நெரிசல் சுற்றுலாப்பயணிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பொலிஸ் கட்டளை சட்டத்தின் 80 ஆவது உறுப்புரைக்கமைய ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதற்கு பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற போதிலும் , இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரையில் அவ்வாறு எந்த அனுமதியும் பெறப்படவில்லை.
இவற்றை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் செயற்படும் பட்சத்தில், பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
