கடந்த 9ம் திகதி கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழையும் போது அவர்களை இலக்காக கொண்டே இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பகிரப்படும் செய்திகளை இராணுவத்தினர் மறுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வான்நோக்கியும், ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலின் மதில் சுவர் மீது துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி வேட்டு துளைத்தது எதிர்பார்க்காத விடயமெனவும் இராணுவத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு, நேற்றைய தினம் காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட வலயத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் அனுப்பப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அனுப்பப்பட்ட செய்தி தொடர்பிலும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா கருத்து வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இராணுவத்தினர் செயற்பட மாட்டார்களெனவும், அவ்வாறான செய்திகள் பொய்யானவையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
