பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது. இதில் தீர்க்கமான முடிவு எட்டப்படுமென ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்சம்பள அதிகரிப்பு மாத்திரமன்றி, மலையக தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. மலையக தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற்துறையை இழிவுபடுத்தும் சிலரும் தமது சமூகத்தில் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிகன்காட்டியுள்ளார்.
நவீன முறையில் தேயிலை தொழிற்துறையை முன்னெடுக்கும் பட்சத்தில் குறித்த தொழிற்துறையிலிருந்து வெளியேறுவதற்கு எவரும் விரும்பமாட்டார்கள். மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை ஆரம்பிக்கவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள 435 தோட்டப்பிரிவுகளில் ஓய்வுஅறை கட்டிடங்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் ஒருசிலர் குறித்த திட்டங்களை இழிவுபடுத்துகின்றனர்.
எந்தவொரு எதிர்மறையான கருத்துக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், மலையக மக்களின் நலன்கருதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
தனது அமைச்சினூடாக வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்திய வீட்டத்திட்டமும் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான இடம் மற்றும் நிதி என்பனவும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்புடன் தனது சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்படுமென ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.
