சிங்கராஜ வனப்பகுதியின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வீதி நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய நிர்மாண பணிகளை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சிங்கராஜ வனப்பகுதியூடாக கிராமிய பாதையொன்று காணப்பட்டது. அதனை பூணரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால் இவ்வீதியினை அகலப்படுத்தி சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த வீதியை நிர்மாணிக்கும் போது பல மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பான சுற்றாடல் அறிக்கையொன்றை பெற்றுக்கொண்டு, அதற்கமைய செயற்படுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அமைச்சர் சி.பி ரத்னாயக்க குறிப்பிட்டார். இந்த அறிக்கை கிடைக்கும் வரை நிர்மாண பணிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, இந்த வீதி நிர்மாணம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கராஜ வனப்பகுதியூடனான வீதி நிர்மாணம் உடன் நிறுத்தம்…
படிக்க 1 நிமிடங்கள்