உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்த, பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள துன்ஹிந்த நீர்வீழ்ச்சி வளாகத்தில் புதிய பார்வையாளர் மையத்தை (Viewing Deck) அமைக்கும் திட்டம் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
துன்ஹிந்த நீர்வீழ்ச்சியின் பழைய பார்வையாளர் மேடைக்கு அருகில் இந்த விழா இடம்பெற்றது.
50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானதும், தற்போது சேதமடைந்த நிலையிலுள்ளதுமான பழைய பார்வையாளர் மேடைக்குப் பதிலாக அமைக்கப்படும் இந்தப் புதிய மையத்திற்காக ஊவா மாகாண சுற்றுலா அமைச்சினால் 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தரமான பார்வையிடும் அனுபவத்தையும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில், சொரணாதோட்ட பிரதேச சபையின் தவிசாளர் ஜெயலத் எதிரிமான்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
