ஹொரணைப் பகுதியிலுள்ள பிரபல தனியார் வகுப்பின் உரிமையாளர் ஒருவர் 15.250 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து போதைப்பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, சிம் கார்டு மற்றும் போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் மின்னணுத் தராசு என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் ஹொரணையில் உள்ள பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவருக்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகள் உள்ளதா, அவர் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருகிறாரா அல்லது மேலதிக வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு ‘ஐஸ்’ போதைப்பொருளை விற்பனை செய்தாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
