இயக்குவதற்கான இயந்திர வலு (Power Set) பற்றாக்குறை காரணமாக, களனிவெளி ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் இரண்டு பிரதான ரயில் சேவைகளை மறு அறிவித்தல் வரை உடனடியாக இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விடயத்தை இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர ஜயசேகர விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை கீழ்வரும் இரு முக்கிய ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன:
மாலை நேர சேவை: பிற்பகல் 04.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் ரயில்.
காலை நேர சேவை: முற்பகல் 05.55 மணிக்கு அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில்.
தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ச்சியாக மற்றும் திட்டமிடப்படாத வகையில் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுவது பதிவாகி வருவதாகவும், அது இப்போது ஒரு சாதாரண நிலைமையாக மாறி வருவதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அலுவலக ஊழியர்கள் மற்றும் நாளாந்தப் பயணிகள் பெருமளவில் பயணிக்கும் இவ்வாறான பரபரப்பான, நெருக்கடிமிக்க நேரங்களில் (Peak Hours) ரயில்கள் திடீரென இரத்துச் செய்யப்படுவதால், நாளுக்கு நாள் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கும் பெரும் பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருவதாகவும் அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
