பொதுச்சொத்துக்களை அழித்து, பெருமளவிலான மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தொலைபேசி கம்பிகளை (Wires) திருடி வந்த இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் டெலிகொம் காரியாலயத்தின் கீழ் உள்ள நோர்வூட், மஸ்கெலியா மற்றும் காசல்ரீ ஆகிய பகுதிகளில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இரவு வேளையில் வாகனங்களில் வந்து, தொலைபேசி கம்பிகளை அறுத்துச் சென்று, பின்னர் அவற்றை எரித்து உள்ளிருக்கும் செப்புப் பகுதிகளை (Copper) மாத்திரம் பிரித்தெடுத்து விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் திருட்டு காரணமாக அப்பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நோர்வூட் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தொலைபேசி கம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போது சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தொலைபேசி கம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
உருக்கப்பட்ட செப்பு ஒரு கிலோகிராம் 2,500 ரூபா என்ற விலைக்கு இவர்கள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
