கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கான அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. கொரோனா தொற்றின் ஆரம்பம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியாவால் வலியுறுத்தப்பட்டிருந்தது. அடுத்த மாதம் இடம்பெறவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தப்படுமென அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் தமது நாடு அனுமதியளிக்கப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் இத்தகைய விசாரணைகளை தாம் ஏற்கப்போவதில்லை எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் அதன் ஆரம்பகட்ட பரவலாக்கம் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அதனூடாக தொற்றை இல்லாதொழிப்பதற்கான இயலுமை, ஏனைய நாடுகளுக்கு கிட்டுமென பிரித்தானியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
