சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் (ரூ. 2 கோடி) பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத பண்டார, எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) 24 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள், வங்கிப் கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, முதலாவது சந்தேகநபரை சாட்சி ஒருவர் துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நான்கு சந்தேகநபர்களும் ஜூலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
