நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.