Back to homepage

காலங்கள் கடந்தும் காவியத் தலைவியாய் நம் நினைவுகளில் டயானா

காலங்கள் கடந்தும் காவியத் தலைவியாய் நம் நினைவுகளில் டயானா

1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் திகதி நோர்ப்போர்க் எனும் இடத்தில் பிறந்தார். இவரது எட்டு வயதில் சில குடும்ப தகராறுகள் காரணமாக தாய் மற்றும் தந்தையிடம் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டார் டயானா.

ஒரு நிகழ்வில் டயானாவை பார்த்ததும் மனம் மாறினார் இளவரசர். இளமைக் காலங்களில்  அன்பிற்காக ஏங்கிய டயானா, இளவரசரின் காதலை ஏற்று, இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணத்திற்குக் வித்திட்டார்.

1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் நாள் டயானாவுக்கும் வேல்ஸ் இளவரசர் சார்லசுக்கும் புனித பால் தேவாலயத்தில் திருமணம் நடந்தேறியது. இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார் டயானா. டயானாவின் புகழும் உயரத் தொடங்கியது.

பொதுவாக அரசக் குடும்பத்தினர் வெளியுலகத்தினருடன் தொடர்பின்றி இருப்பர். ஏதாவது  விழாக்களில் மட்டுமே வந்து செல்வர். ஆனால் டயானா, குடிசை முதல் கோபுரம் வரை சுற்றி வந்தார். தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து அரசக் குடும்பத்தினர் மரபை மாற்றினார். பள்ளிக்குச்சென்று படித்தலே பக்குவம் தருமெனக் கருதினார்.

இந்நிலையில், தன் கணவரின் மற்றொரு பெண்ணுடனான தொடர்பையறிந்து மனமுடைந்து போனார். தற்கொலைக்கும் முயன்றார். தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை சகிக்க முடியாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எய்ட்ஸ் நோயாளியிடம் கை குலுக்குதல், தொழுநோயாளியிடம் நலம் விசாரித்தல் எனப் பிணியுடையோரிடமும் பிணக்கின்றிப் பழகினார். அந்த சமயத்தில் நேர்காணல் ஒன்றில், ‘நான் ராணியாக விரும்புகிறேன். ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல. மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று டயானா கூறியது வையம் முழுவதும் வைரலாகப் பரவியது.

கருத்து வேறுபாடுகள்  மத்தியில் விவாகரத்து பெற்றார் டயானா. இந்நிலையில் டோடி என்பவருடன் டயானாவுக்கு ஏற்பட்ட காதல் சர்ச்சைகளை சம்பாதித்தது. பாரீசில் 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் திகதி, டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுநர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர் வாகனத்தைத் துரத்திய மற்றொரு வாகனத்தில் இருந்தவர்கள் புகைப்படக்காரர்கள் அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது டயானாவின் கார். டோடியும் பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட, மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் மறைந்தார் டயானா. இளவரசி டயானாவின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


Back to homepage

Similar Photo Galleries