அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் காட்டுத்தீயினால் பாரிய அழிவுகளை சந்தித்து வருகிறது. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் காட்டுத்தீயின் அகோரத்தினால் அமெரிக்கா தடுமாறி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியாவின் புகழ்ப்பெற்ற லொஸ் ஏன்ஜல்ஸ் காட்டுத்தீ அனர்த்தத்தால் மிக மோசமாக அழிவுகளை சந்தித்துள்ளது. வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த இடங்கள் பல தீயில் கருகியுள்ளன.
அனர்த்தங்களினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கட்டாயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்துள்ளனர்.
காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் பெரும் இன்னல்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர். தீயை அணைப்பதற்கு போதுமான நீர் இல்லாத பிரச்சினையும் ஏற்ப்பட்டுள்ளது.
10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புக்கள் முற்றாக தீயில் அழிவடைந்துள்ளன. லொஸ் ஏன்ஜல்ஸ் ஒரு போர்க்களமாக காட்சியளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த இயற்கை பேரழிவு அமெரிக்காவை பல வழிகளிலும் பின்தள்ளுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலையால் தீப்பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதேவேளை பல இடங்களில் வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.