ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான ரஷீட் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலிபான் அமைப்பினருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலுள்ள மகளிருக்கான சில தொழிற்பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தலிபான் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்களுக்கான ஆரம்பநிலை மற்றும் உயர்கல்வி செயற்பாடுகளுக்கும் ஏற்கனவே தலிபான் தடை விதித்துள்ளது.
விளையாட்டு சார்ந்தவற்றிலும் பெண்கள் ஈடுபடுவதற்கும் தலிபான் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய போதனைகளில் கல்விக்கு முக்கிய இடமுள்ளது. ஆண் பெண் என இருபாலருக்கும் அறிவுசார்ந்த விடயங்களை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரு பாலருக்குமான சமமான ஆன்மீக மதிப்பை புனித குர்ஆன் சுட்டிக்காட்டுவதுடன் அதனை ஏற்றுக்கொள்வதாக ரஷீட் கான் தனது இன்ஸ்;டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனனங்களை மூடியுள்ளமை கவலைக்குரிய மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் செயல் என ரஷீட் கான் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானங்கள் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை பாதிப்பதுடன் சமூகத்தின் பரந்துபட்ட நிலையையும் முடக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.