காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 1-ந் திகதியில் இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது. லெபனான் மீது தரைவழி மற்றும் வான் தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்தது. அதற்கு ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை முயற்சி மேற்கொண்டன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் இறுதிக்கட்டத்தை எட்டாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை நடத்திய பிறகு போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து லெபனான் (ஹிஸ்புல்லா) உடனான போர் நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு இஸ்ரேல் கேபினட்டில் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் உடினடியாக ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. அதிகாரிகளுடன் இஸ்ரேல் அதிகாரிகள் இன்று மாலை சந்திக்க இருக்கிறார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு செய்யப்படும்.
பிரதமர் நேதன்யாகு காசாவில் நடைபெற்று வரும் போரை கையாளும் முறையை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் போர் கேபினட்டில் இருந்து பென்னி கான்ட்ஸ் ராஜினாமா செய்தார். அவர் தற்போது நடைபெற இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கூறுகையில் “நேதன்யாகு தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இது இஸ்ரேல் வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள், வீரர்களுக்கான உரிமை என்று இஸ்ரேல் மக்களுக்கு தெரியும்” என்றார்.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டையில் சுமார் 3700 பேர் உயிரிழந்துள்ளனர்.