தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத் தொகுதி மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 500 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடியமற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்றிலிருந்து (நவம்பர் 25ஆம் திகதி) மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பிலிருந்து மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.