முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினமும் (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நேற்று முன்தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.