2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தலைமையில், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட தேசிய மட்டத்திலிருந்து மாவட்டம் மட்டம் வரையிலான அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பாரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.