500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி மாத்தறை, கந்தர நுன்னவெல்ல பகுதிக்கு படகு மூலம் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாபலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வேன் ஒன்றில் போதைப்பொருள் கொண்டு வரப்பட்ட விடயத்தை அறிந்துள்ளனர்.
இதன்போது 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாய்க்கு அதிகளவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.