ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நல சிகிச்சை மையங்களை திரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிரதான இஸ்லாமிய நாடுகளுள் ஒன்றான ஈரானில் குடியரசு ஆட்சி முறை இருந்தாலும் இஸ்லாமிய சட்டங்களின் படியே ஆட்சி நடந்து வருகிறது. மதத் தலைவர் அலி ஹொசைனி கமேனி அந்நாட்டின் உயர்மட்ட தலைவராக உள்ளார்.
பொது இடத்தில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் மத்தியில் இதுபோன்ற ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. எனவே ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நோய் இருப்பதாக கருதப்பட்டு அவர்களின் மனநிலையை சரிசெய்ய ‘மனநல சிகிச்சை மையம்’ அமைக்கபட உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி, ஹிஜாப்பை துறப்பவர்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை இங்கு வழங்கப்படும். குறிப்பாக, இளம் வயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதலை ஊக்குவிப்பதே இந்த க்ளினிக்கின் நோக்கம் ” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது மனித உரிமை மீறல் என இந்த இந்த அறிவிப்புக்கு மனித உரிமை மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் ஈரானில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழகத்தில் வந்து அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் அந்த பெண் மனநலம் சரியில்லாதவர் என்று நிர்வாகம் தரப்பில் முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.