நியுசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 45 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. நேற்றைய தினம் தம்புள்ளையில் போட்டி இடம்பெற்றது.
போட்டியின் இறுதியில் மழை பெய்ததால் 49.2 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றது.
குசல் மென்டிஸ் 143 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னான்டோ 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மழை காரணமாக நியுசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 27 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே நியுசிலாந்து அணி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மென்டிஸ் தெரிவானார். 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.