முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு சொந்தமான ஒருங்கிணைக்கப்பட்ட வாகனம் என சந்தேகிக்கப்படும் V8 ரக வாகனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். குறித்த வாகனம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கும் வரை அதனை நீதிமன்ற பொறுப்பில் எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் நீதிமன்றில் வாகனத்தை வைத்திருப்பதற்கான வசதிகள் இன்மையால் அதனை திணைக்களத்தின் பொறுப்பில் வைத்துக்கொள்ளுமாறு நீதவான் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த வாகனம் இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டது. சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட இந்த வாகனத்தின் மேற்பகுதிக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக சுஜீவ சேனசிங்க சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி குழாம் தெரிவித்தது.
இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், வாகனம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றல்ல எனவும் அதனை விடுவிக்குமாறும் சட்டத்தரணி குழாம் மன்றில் கோரிக்கை விடுத்தது.