Glocal Fair பணியகத்தின் ஊழல் மோசடிகள் குறித்தான 15 முறைப்பாடுகளின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உறவினர்களை பயன்படுத்தி பணத்தை சேகரித்தமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான 15 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் செய்வதற்கென உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு தகவல் வழங்கியதாகவும் கடந்த அரசாங்கத்திலிருந்த அரசியல்வாதிகள் தமது உறவினர்களை பணியகத்தில் வைத்துக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட விதம் தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அதன் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் சட்டவிரோதமான முறையில் E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் வேலைவாய்ப்புக்கென ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் தென்கொரிய தூதரகத்தின் அறிவிப்பிற்கமைய, குறித்த பிரிவில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய வழங்கப்படும் விசா ரத்தாகுமெனவும் மோசடிக்காரர்கள் பலர் தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்தான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.