உலக நாயகன் என தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 230இற்கும் அதிகமான படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னதாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தென்னாலி படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக நாயகன் பட்டம் வழங்கப்பட்டது.
அதிலிருந்து நடிகர் கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர், நம்மவர் எனப் பல பட்டங்களை வைத்து இரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கை இரசியர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில்,
தனக்கு பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு அவமரியாதை ஏற்படக்கூடாது.
திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல இரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.
கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
இனிவரும் காலத்தில் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது, உலக நாயகன் என தன்னை அழைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.