இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டுவன்டி டுவன்டி தொடர் 1 – 1 என சமநிலையில் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது டுவன்டி டுவன்டி போட்டியில் நியுசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. வில் யங் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களையும், மதீஷ பத்திரன 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். 109 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பெத்தும் நிஸ்ஸங்க 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். லொகி பெர்கசன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக லொகி பெர்கசன் தெரிவானார்.
தொடர் நாயகமான வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.