தொம்பே, உடமாபிட்டிகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 13 சந்தேக நபர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொம்பே, ஹெய்யன்துடுவ, சியம்பலாப்பே, கடுவலை, தெல்கொட, மல்வானை, இம்புல்கொட, கேகாலை, ஹோமாகம, கிரிந்திவெல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், கார், வேன் மற்றும் 02 முச்சக்கரவண்டிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.