அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று (5) நடைபெறவுள்ளது.
துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹரிஸ் சிறிய வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இருந்தாலும், இறுதி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுவதாக இருந்தது.
இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஜோர்ஜியா மாகாணம், அட்லான்டாவில் கடந்த ஜூன் 27-ஆம் திகதி நடைபெற்றது. இதில், 81 வயதாகும் ஜோ பைடன் மிகவும் தடுமாறினாா். இது, ஜனநாயகக் கட்சியினரிடையே பெரிய அதிா்வலையை ஏற்படுத்தியது.
அதையடுத்து, ஜனாதிபதி தோ்தல் போட்டியிலிருந்து பைடன் விலகினாா். அவருக்குப் பதிலாக டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிட துணை அதிபா் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சியினா் தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.