பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 204 ஒட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டினை இழந்து 204 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில் களத்திற்குள் வந்த அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி 32 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.