அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ஜோ பைடனின் ஆட்சி காலம் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அமெரிக்காவில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியில் பொருளாதாரத்திலும், நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதானால் இந்த தேர்தல் சர்வதேச ரீதியில் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜோ பைடனின் உடல் நிலை குறித்து, அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டதால், தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.
இதனையடுத்து, ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதுடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கப்பட்டார்.
இந்த தேர்தலில், வாக்களிப்பதற்கு மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் தகுதிப்பெற்றுள்ளதாகவும், 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ள நிலையில், நாளை சுமார் 11 கோடி பேர் வாக்களிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளருடன் டொனால்ட் ட்ரம்ப் மோதுவது இது முதல் முறை அல்ல. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்டு வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியானார் ட்ரம்ப்.
ஆனால், இம்முறை வெளியான கருத்துக் கணிப்புக்களின்படி, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், 290ஆண்டு கால, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் திருப்பமாக அமையும். அமெரிக்க ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் பெண் என்ற பெருமையையும், ஜனாதிபதியாகும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெறுவார்.
மக்களின் வாக்கு அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை வேட்பாளர்கள் பெறுவார்கள். இந்த தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள். அந்த குழு எலக்டோரல் காலேஜ் (Electoral college) என்று அழைக்கப்படும்.
அமெரிக்காவில் மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக கமலா சார்பில் இதுவரை 6,640 கோடியும் (அமெரிக்க டொலர்) ட்ரம்ப் சார்பில் 3,000 கோடியும் (அமெரிக்க டொலர்) செலவிடப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தேர்தலின் நிறைவில் அடுத்த ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் சபை கூடும்.
இதனைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதி ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்பாரா? அல்லது அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பாரா என்ற கேள்வி உலக மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.