இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் காஷாவில் 50க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காஷாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜபாலியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவ்வாறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த செயற்பாட்டிற்கு யுனிசெப் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த மிலேச்சதனமான செயல் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷா சிறுவர்களுக்கு போலியோ தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் இஸ்ரேலின் தாக்குதல்களினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி நிலையங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களினால் நான்கு சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
யுத்த நியதிகளை மீறி இஸ்ரேல் செயற்படுகிறது. இஸ்ரேலின் இந்த செயற்பாட்டை நிறுத்துவற்கு உலக நாடுகள் முன்வராதது ஏன் என மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இஸ்ரேலின் மிலேச்சதமான தாக்குதல் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முக்கிய அமைப்புகள் மௌனம் காப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அமைதிக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடும் வத்திக்கானும் இதில் மௌனித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களினால் உயிரிழப்பது இனங்கள் அன்றி மனிதர்கள் என உணர்வுபூர்வமாக சிந்தித்து இஸ்ரேலின் இந்த செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.