‘ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை’
வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை என்கிறார் திருவள்ளுவர்
உலக சிக்கன தினம் இன்றாகும்.
‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையை பேணுகின்றன’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் ஒக்டோபர் 31 ஆம் திகதி உலக சிக்கன நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் இந்த நாள் வலியுறுத்துகின்றது.
இந்த தினத்தை ஸ்பைன் நாட்டினர் 1921ஆம் ஆண்டு முதன் முதலாக அனுஸ்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து 1924 ஆம் ஆண்டளவில் இத்தாலியின் மிலன் நகரில் சிக்கன மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததுடன், மக்கள் அனைவருக்கும் சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும்; வகையில் உலக சிக்கன தினம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கமைய உலக சேமிப்பு தினத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் மக்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என வங்கிகள் மக்களின் வீடுகளுக்கு சென்று வலியுறுத்தின. பின்னர் இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக சேமிப்பு தினத்திற்கு மேலும் ஆதரவு பெருகியது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இறந்த தினம் ஒக்டோபர் 31ஆம் திகதி என்பதால் இந்தியாவில் மாத்திரம் உலக சிக்கன தினம் ஒக்டோபர் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது பழமொழி. நாம் சேமிக்கும் சிறிய தொகையும் கூட எங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு’ எதிர்காலம் ஒளிமயமாகத் திகழ இன்றிலிருந்தே நாம் அனைவரும் சேமிப்போம்.
ஆக்கம் : யதுஷா ரவி தியாகராஜா