மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று (23) கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.இ. தீவுகள் கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 க்கு 20 சர்வதேச தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற 20 க்கு 20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில், அடுத்த தொடரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கை அணி இறுதியாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இழந்திருந்தது. எனினும் 2020ஆம் ஆண்டு இலங்கை அணி சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.