இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.
இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 3 வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், ஹிஸ்புல்லா புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அலி ஹுசைன் ஹசிமா ஆகியோர் ஹிஸ்புல்லா தளபதிகளுடன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
கடந்த 8-ந் திகதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, ஹிஸ்புல்லாவின் அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஹஷேம் சபிதீன் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இதை ஹிஸ்புல்லா இயக்கம் இன்னும் உறுதி செய்ய வில்லை.
இதற்கிடையே லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ந் திகதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1550-ஆக அதிகரித்துள்ளது.