அடித்துக் கொன்று சிறிய உலக முடிவிலிருந்து பள்ளத்திற்கு வீசப்பட்ட ஹாலி எல ரொசெட்வத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியின் சடலம் 16 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய குடா ஓயா இராணுவ முகாமின் கமாண்டோ அதிகாரிகள் குழுவொன்று கயிறுகளின் உதவியுடன் புதன்கிழமை (16) பிற்பகல் மடுல்சீம சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இறங்கி மேற்கொண்ட சோதனையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை உரப் பையில் கட்டி கயிறு, மூலம் பெரும் முயற்சியுடன் மேலே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல, ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த சுஜீவன் என்ற இளைஞன் கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது.
இந்நிலையில் சடலத்தை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த நிலையிலேயே இன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள், இராணுவத்தினர், பொலிஸார், விசேட பயிற்சி பெற்ற இராணுவ படைப்பிரிவினர் இணைந்தே தேடுதலில் ஈடுபட்டனர்.