கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் மூவர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
2016ம் ஆண்டு செவனகல பகுதியிலுள்ள ஆயுர்வேத மருந்தகத்தை சட்டவிரோதமாக சுற்றிவளைத்து அங்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததாக குற்றம் சுமத்தி அங்கிருந்து ஊழியர்கள் நால்வரை கைது செய்த அவர்களை விளக்கமறியலில் வைத்த குற்றச்சாட்டில் கலால் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த செயற்பாட்டின் ஊடாக அதிகாரிகள் சொந்த விருப்பு வெறுப்புக்களை காண்பிக்கும் நோக்கில் செயற்பட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மருந்தகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன் குறித்த 3 அதிகாரிகளும் தலா 4 இலட்சம் ரூபாவை மருந்தகத்தின் உரிமையாளருக்கு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட மருந்தக ஊழியர்கள் நால்வருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாவை கலால் அதிகாரிகள் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.