அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் (வயது 59), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (வயது 78) போட்டியிடுகிறார்கள். அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இரு வேட்பாளர்களும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையை கமலா ஹாரிசின் டாக்டர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார். அதில், கமலா ஹாரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.
ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து உள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் தனது உடல்நிலை குறித்த விரிவான தகவல்களை வெளியிட மறுத்து வரும் நிலையில் கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். கமலா ஹாரிசுக்கு முன்பு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வயது ஆகிவிட்டதாக டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளதால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.